Thursday, November 5, 2009

இந்திய தேசத்து இளைஞர்களே!



பாரதத்தாயின் தவப்புதல்வர்களுக்கு வணக்கம்.
சாதிக்க முயலும் நமக்கு எதற்கு சாதி சங்கங்கள்.சிந்திக்க தெரிந்த நம்மால் எதையும் சாதிக்கமுடியும்.முடியாது என்ற வார்த்தையை தூக்கி எறிவோம்.முன்னுக்கு வர முடியவில்லையே என்று மூலையில் முடங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்காமல் ஓங்கி குரல் கொடுப்போம்.நம் குரல் இனிமையுடன் வலிமையையும் சேர்த்துக் கொள்வோம்.நமது திறமை வெளிச்சத்துக்கு வரும்.

நமது முயற்சியை தீவிரத்துடன் காட்டுவோம்!தீவிரவாதம் வேண்டாம் நமக்கு.தீவிரவாதம் தான் வழி என்றால் புத்தனும்,காந்தியும் ஏன் பிறந்தார்கள்.அகிம்சையால் அவர்கள் சாதிக்காத எதை நாம் தீவிரவாதத்தால் சாதிக்கப்போகிறோம்.நம் நாடு இளைஞர்களை என்றுமே இழந்து விட நினைப்பதில்லை, தீவிரவாதியாய் இருந்தாலும் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில்.

நமது ஒவ்வொரு செயலும் இந்தியத்தாயின் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டுமே தவிற எதிர்ப்புடன் இருக்கவேண்டாம்.சாக்கடை ஓடும் இடத்தில் கூட நாம் கூட்டத்தை கூட்டுவோம்.சாக்கடையும் சுத்தமாகும்,நம் சிந்தனையும் வெற்றியாகும்.

அரசியல்வாதிகள் கூட்டும் வீண் கூட்டங்களில் நாம் தலையை காட்ட வேண்டாம்.அவர்களுக்கு நம் நிலையை காட்டுவோம்.பிரச்சினைக்குரியவர் எவர் பின்பும் நாம் செல்லாமல் அவர்களுக்கு முன் சென்று அவர்களின் முயற்சியை முறியடிப்போம்.

பிறர் பெயரை எழுத கற்றுக்கொண்ட நாம்,நம் பெயரை பிறர் எழுத கற்றுக்கொடுப்போம்.இதுவே நாம் ஏந்தும் முதல் ஆயுதம்.இது குறிவைத்த இடத்தயும் தாக்கும்,குறி வைக்காத இடத்தையும் தாக்கும்.எழுது கோலினால் இலக்கியம் மட்டுமல்ல, இதிகாசம் மட்டுமல்ல, இந்தியாவின் சரித்திரத்தையே மாற்ற முடியும்.

நம் இந்தியத்தாயின் பெயரை களங்கடிக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கப்புறப்படுவோம்.நம் முயற்சி முறியடிக்கப்படும் போது முகம் சுழிக்க வேண்டாம்.முன்னோக்கி செல்வோம்,நம்மை தடுப்பவர்களின் அராஜகத்தை தகர்ப்போம்.புறப்படுங்கள் இளைஞர்களே!  இனி மேலாவது மானுடத்தை நம்புவோம்!மனிதத்தை மதிப்போம்!மனிதநேயம் கொள்வோம்!அன்பு என்னும் ஜோதி அணையாமல் காப்போம்!வாழ்க பாரதம்!வளர்க தமிழ்!
ஜெய்ஹிந்த்!                          


Friday, October 30, 2009

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு(உள்ளக்குமுறள்)

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்!

என்னைப்போன்றே குடும்பபாரம் சுமக்கவேண்டி அயல்நாடுகளில் அல்லல் படும் அத்தனை பேரின் சார்பாக என் உள்ளக்குமுறள்

திரைகடலோடியும் திரவியம் தேடு!தேடி வந்த நாங்கள் தொலைத்தது எத்தனையோ!விசா விற்கும் வியாபாரிகளின் வீர வசனத்தை நம்பி வளைகுடா வந்து ஆண்டுகள் ஐந்தாகிவிட்டது.இன்னும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம்.

வயதில் முதிர்ந்த தாய்,தந்தையற்கு துணையாய் நாங்கள் விட்டு வந்தது அவர்களை விட்டு என்றும் பிரியமறுக்கும் நோயை மட்டுமே!வாழ்க்கை துணையாய் வாய்த்த மனைவிக்கு வாழ்க்கையில் துணையாய் வாழ வக்கில்லாமல் இல்லறவாழ்க்கைக்கு ஏங்கித்தவிக்கும் எங்களால்,கணவன் இருந்தும் கைம்பெண்ணாய்,புகுந்த வீட்டிலேயே வாழாவெட்டியாய்,கணவன்,குழந்தையென்ற வாழ்க்கை கனவுகளை கண்களில் சுமந்து கொண்டு குழந்தை ஆசையில் அடிக்கடி அடிவயிற்றில் கையை வைத்துப்பார்க்கும் அந்த அபலைப்பெண்ணின் இழந்த வாழ்க்கையை ஈடு செய்யமுடியுமா எங்கள் திரைகடல் ஓடி தேடிய திரவியத்தால்?

தாயை ,தந்தையை,மனைவியை,குழந்தையை மனதில் தினமும் நினைத்து நினைத்து என்னடா வாழ்க்கை இந்த வேதனை வாழ்க்கை வேண்டுமா என்று மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறோம்!

அன்பினால் பெற்றெடுத்து ஆசை ஆசையாய் எங்களை வளர்த்த தாய்க்கும்,தந்தைக்கும் அருகே இருந்து பாசம் கலந்த பணிவிடை செய்யும் பாக்கியம் இல்லாத பாவிகள் நாங்கள்.

என்னடா வாழ்க்கை இது?இல்லறமா?துறவறமா?இனம் காண முடியாத வேதனையும் சோதனையும் நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கை தேவைதானா?என்று எங்களையே கேட்டுக்கொண்டு பின் குடும்பத்தின் வறுமையை நினைத்து எங்களை நாங்களே சமாதானப்படுதிக்கொள்ளும் அப்பாவி துரதிருஷ்டசாலிகள் நாங்கள்.எந்த நேரமும் ஏசி அறையில் இருந்தாலும் உள்ளம் மட்டும் தனிமைதணலில் புழுங்கிப்போவது யாருக்கு தெரியும். நாங்கள் கல்யாணம் பண்ணிய பிரமச்சாரிகள்!

தனியா தாகத்தோடு விரக்தியும் வேதனையும் கலந்த சோகம்தான் எங்கள் சொந்தம்!இனி என்று வரும் எங்கள் வாழ்வில் வசந்தம் என்று ஏக்கமுடன் காதிருக்கிறோம்!

பாலிய(ல்) பலாத்க்காரம்

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்! என்று பாரதி யாரை மனதில் நினைத்து பாடினானோ?தெரியவில்லை.இன்று நம் சமுதாயத்தில் மனித மாண்பை குலைக்கும் விதமாக நடக்கும் வெறிச்செயல்களில் இந்த பாலியல் பலாத்க்காரத்தில் ஈடுபடும் காட்டு மிராண்டி கூட்டங்களை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் பாட தோன்றுகிறது.கடந்த சில நாட்களாக வரும் இத்தகைய செய்திகளை பார்க்கும்போது இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்கிறது.பெற்ற மகள்,பச்சிளம் குழந்தை என்றெல்லாம் பார்க்காத இந்த காட்டு மிருகங்களை என்னவென்று சொல்வது.

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றால் அந்த தெய்வத்தையே கற்பழிக்கும் தெருபொறிக்கி நாய்கள்,பிணம் தின்னும் கழுகுகள்,இரத்த வெறி பிடித்த காட்டு ஓநாய்கள்,இத்தகைய இழி பிறவிகள் காட்டு விலங்குகளை காட்டிலும் கட்டுப்பாடற்றவை.தாய்,தமக்கை,தங்கை என்ற தராதாரம் இந்த ஜென்மங்களுக்கு இல்லை.

இனி அடுத்து பிறக்கப்போகும் பெண் சிசுக்கள் கூட துணி உடுத்தி பிறக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது.பாலிய திருமணத்தை தடுத்து விட்ட நம்மால் ஏன் இந்த பாலியல் பலாத்காரங்கலை தடுக்க முடியவில்லை.

அழுகின்ற குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களின் முந்தானை விலகலையும் முறைத்துப் பார்க்கும் இந்த முறைகெட்ட முரடர்களை பார்த்து அவர்களை படைத்தவனே எண்ணி தலைகுனிவான்.இவர்களை படைத்ததை நினைத்து வேதனைப்படுவான்.துள்ளித் திரியும் இந்த புள்ளிமான் குட்டிகளை வேட்டையாடும் காட்டு ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத கடவுள் எங்கே?காவல் துறை எங்கே?

சிந்தித்து பாருங்கள் சினேகிதர்களே! சிறு மதி படைத்த சில மனிதக்கூட்டம் மனித மான்பை சிதைத்து,மனிதப்பண்பை மண்மூடி புதைத்துக்கொண்டிருக்கிறது.புறப்படுங்கள் இளைஞர்களே!தாய் நாட்டயும்,தாய்குலத்தையும் காப்பதற்கு!

Search This Blog