Thursday, November 5, 2009

இந்திய தேசத்து இளைஞர்களே!



பாரதத்தாயின் தவப்புதல்வர்களுக்கு வணக்கம்.
சாதிக்க முயலும் நமக்கு எதற்கு சாதி சங்கங்கள்.சிந்திக்க தெரிந்த நம்மால் எதையும் சாதிக்கமுடியும்.முடியாது என்ற வார்த்தையை தூக்கி எறிவோம்.முன்னுக்கு வர முடியவில்லையே என்று மூலையில் முடங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்காமல் ஓங்கி குரல் கொடுப்போம்.நம் குரல் இனிமையுடன் வலிமையையும் சேர்த்துக் கொள்வோம்.நமது திறமை வெளிச்சத்துக்கு வரும்.

நமது முயற்சியை தீவிரத்துடன் காட்டுவோம்!தீவிரவாதம் வேண்டாம் நமக்கு.தீவிரவாதம் தான் வழி என்றால் புத்தனும்,காந்தியும் ஏன் பிறந்தார்கள்.அகிம்சையால் அவர்கள் சாதிக்காத எதை நாம் தீவிரவாதத்தால் சாதிக்கப்போகிறோம்.நம் நாடு இளைஞர்களை என்றுமே இழந்து விட நினைப்பதில்லை, தீவிரவாதியாய் இருந்தாலும் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில்.

நமது ஒவ்வொரு செயலும் இந்தியத்தாயின் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டுமே தவிற எதிர்ப்புடன் இருக்கவேண்டாம்.சாக்கடை ஓடும் இடத்தில் கூட நாம் கூட்டத்தை கூட்டுவோம்.சாக்கடையும் சுத்தமாகும்,நம் சிந்தனையும் வெற்றியாகும்.

அரசியல்வாதிகள் கூட்டும் வீண் கூட்டங்களில் நாம் தலையை காட்ட வேண்டாம்.அவர்களுக்கு நம் நிலையை காட்டுவோம்.பிரச்சினைக்குரியவர் எவர் பின்பும் நாம் செல்லாமல் அவர்களுக்கு முன் சென்று அவர்களின் முயற்சியை முறியடிப்போம்.

பிறர் பெயரை எழுத கற்றுக்கொண்ட நாம்,நம் பெயரை பிறர் எழுத கற்றுக்கொடுப்போம்.இதுவே நாம் ஏந்தும் முதல் ஆயுதம்.இது குறிவைத்த இடத்தயும் தாக்கும்,குறி வைக்காத இடத்தையும் தாக்கும்.எழுது கோலினால் இலக்கியம் மட்டுமல்ல, இதிகாசம் மட்டுமல்ல, இந்தியாவின் சரித்திரத்தையே மாற்ற முடியும்.

நம் இந்தியத்தாயின் பெயரை களங்கடிக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கப்புறப்படுவோம்.நம் முயற்சி முறியடிக்கப்படும் போது முகம் சுழிக்க வேண்டாம்.முன்னோக்கி செல்வோம்,நம்மை தடுப்பவர்களின் அராஜகத்தை தகர்ப்போம்.புறப்படுங்கள் இளைஞர்களே!  இனி மேலாவது மானுடத்தை நம்புவோம்!மனிதத்தை மதிப்போம்!மனிதநேயம் கொள்வோம்!அன்பு என்னும் ஜோதி அணையாமல் காப்போம்!வாழ்க பாரதம்!வளர்க தமிழ்!
ஜெய்ஹிந்த்!                          


0 கருத்துரைகள்:

Search This Blog