Friday, October 30, 2009

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு(உள்ளக்குமுறள்)

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்!

என்னைப்போன்றே குடும்பபாரம் சுமக்கவேண்டி அயல்நாடுகளில் அல்லல் படும் அத்தனை பேரின் சார்பாக என் உள்ளக்குமுறள்

திரைகடலோடியும் திரவியம் தேடு!தேடி வந்த நாங்கள் தொலைத்தது எத்தனையோ!விசா விற்கும் வியாபாரிகளின் வீர வசனத்தை நம்பி வளைகுடா வந்து ஆண்டுகள் ஐந்தாகிவிட்டது.இன்னும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம்.

வயதில் முதிர்ந்த தாய்,தந்தையற்கு துணையாய் நாங்கள் விட்டு வந்தது அவர்களை விட்டு என்றும் பிரியமறுக்கும் நோயை மட்டுமே!வாழ்க்கை துணையாய் வாய்த்த மனைவிக்கு வாழ்க்கையில் துணையாய் வாழ வக்கில்லாமல் இல்லறவாழ்க்கைக்கு ஏங்கித்தவிக்கும் எங்களால்,கணவன் இருந்தும் கைம்பெண்ணாய்,புகுந்த வீட்டிலேயே வாழாவெட்டியாய்,கணவன்,குழந்தையென்ற வாழ்க்கை கனவுகளை கண்களில் சுமந்து கொண்டு குழந்தை ஆசையில் அடிக்கடி அடிவயிற்றில் கையை வைத்துப்பார்க்கும் அந்த அபலைப்பெண்ணின் இழந்த வாழ்க்கையை ஈடு செய்யமுடியுமா எங்கள் திரைகடல் ஓடி தேடிய திரவியத்தால்?

தாயை ,தந்தையை,மனைவியை,குழந்தையை மனதில் தினமும் நினைத்து நினைத்து என்னடா வாழ்க்கை இந்த வேதனை வாழ்க்கை வேண்டுமா என்று மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறோம்!

அன்பினால் பெற்றெடுத்து ஆசை ஆசையாய் எங்களை வளர்த்த தாய்க்கும்,தந்தைக்கும் அருகே இருந்து பாசம் கலந்த பணிவிடை செய்யும் பாக்கியம் இல்லாத பாவிகள் நாங்கள்.

என்னடா வாழ்க்கை இது?இல்லறமா?துறவறமா?இனம் காண முடியாத வேதனையும் சோதனையும் நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கை தேவைதானா?என்று எங்களையே கேட்டுக்கொண்டு பின் குடும்பத்தின் வறுமையை நினைத்து எங்களை நாங்களே சமாதானப்படுதிக்கொள்ளும் அப்பாவி துரதிருஷ்டசாலிகள் நாங்கள்.எந்த நேரமும் ஏசி அறையில் இருந்தாலும் உள்ளம் மட்டும் தனிமைதணலில் புழுங்கிப்போவது யாருக்கு தெரியும். நாங்கள் கல்யாணம் பண்ணிய பிரமச்சாரிகள்!

தனியா தாகத்தோடு விரக்தியும் வேதனையும் கலந்த சோகம்தான் எங்கள் சொந்தம்!இனி என்று வரும் எங்கள் வாழ்வில் வசந்தம் என்று ஏக்கமுடன் காதிருக்கிறோம்!

0 கருத்துரைகள்:

Search This Blog